 |

தஞ்சை மாவட்டத்தில் சீர்காழிக்குத் தென் திசையில் 5 கி.மீ
தூரத்தில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இது சிவஸ்தலம் எனினும் முருகன் தலமாகக்
கருதப்படுகிறது.
தாரகாசுரன் என்ற அசுரனுடன் முருகன் போர் புரிந்தபோது துணை நின்ற பூதப்படைகளின்
வீரர்கள் பெரிதும் காயப்பட்டு அவதிப்பட்டனர். அவ்வேளையில் அவர்கள் நிலைகுறித்து
முருகன் தன் தந்தை சிவபெருமானையும் அன்னை பார்வதியையும் மனத்தில் எண்ணித் தியானம்
செய்ய உடனே சிவபெருமான் வைத்திய நாதராகவும், அன்னை தையல் நாயகியாகவும் வந்து தைலம்,
சஞ்சீவி, வில்வம், வில்வமரத்து அடியில் உள்ள மண் ஆகியவை கொண்டு காயங்களை ஆற்றி
உதவினராம்.
வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் புள்ளிருக்கு வேளூர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. புள்
என்ற ஜடாயு, இருக்கு என்ற வேதம். வேள் எனப்படும் முருகன் ஆகியோர் சிவனை
வழிப்பட்டதால் இந்தத் திருப்பெயர் அமையக் காரணமானதாம். இதற்கு ஜடாயுதபுரி என்றும்
பெயர் உண்டு. கந்தபுரி
என்றும் கூறுவர். பரிதி புரி என்றும் சிறப்பிப்பர். அங்காரகபுரம் என்பதும்
உண்டு. ஞானசம்பந்தர், அப்பர், குமரகுருபரர் ஆகியோர் பாடிய தலம் இது. இந்தத் தலத்திலே
தீர்த்தம் உண்டு. அதற்குச் சித்த அமிர்த தீர்த்தம் என்று பெயர்.
இந்தத் தீர்த்தத்திற்கு வரலாறு உண்டு. காமதேனு தானாகவே பால்சுரந்து வைத்திய
நாதனுக்கு அபிஷேகம் செய்தது. அந்தப்பால் அதிகம் சுரந்து நிரம்பிவிட அதுவே கோட்கிர
தீர்த்தம் என்று பெயர் பெற்றது. இது கிருத யுகத்தில் நடந்தது என்று புராணம்
கூறுகிறது. அடுத்து கலியுகத்தில், அதாவது தற்போது சித்தர்கள் இறைவன் வைத்திய
நாதனுக்குத் தேவாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்தத் தேவாமிர்தம் இந்தத்
தீர்த்தத்தில் கலந்துவிட அதுவே சித்தாமிர்தம் என்ற சிறப்புப் பெயர் பெற்றது.
பொதுவாகத் தலங்களில் உள்ள தீர்த்தங்களில் சில ஐந்துக்கள், நீர்ப்பாம்பு-தவளை ஆகியவை
இருக்கும் அல்லவா. ஆனால் இந்தத்தீர்த்தம் அவற்றிற்கு விதி விளக்கு. அவைகள் எதுவும்
இதில் இல்லை. இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள் எவ்வளவு கொடிய நோயானாலும் நீங்கப்
பெற்று நலம் பெறுவார்கள்.
இந்தத் தலத்தில் வழங்கப்படும் மருந்து ஒன்று உண்டு. அதற்குத் திருச்சாத்துண்டை என்று
பெயர். இந்த மருந்தினை ஆலயத்தினரே முறைப்படி தயாரித்து நியாய விலையில்
வழங்குகின்றனர். இம்மருந்து மிகவும் அரியது என்றும் அற்புத ஆற்றல் பெற்றது என்றும்
4448 வகை நோய்களைத் தீர்க்கும் பேராற்றல் கொண்டது என்பதும் பிரசித்தம். இந்த
மருந்தினைப்பற்றி ஆதியில் குமரகுருபர சுவாமிகள் தம் முத்துக்குமாரசாமி பிள்ளைத்
தமிழில் பாடியிருக்கிறார். இப்பாடலுக்கு முருகப் பெருமானே "பொன் பூத்த குடுமி" என்று
அடி எடுத்துக் கொடுத்து அருள்புரிந்தான்.
இந்தத் தலத்தில் அர்த்தஜாமப் பூஜையின்போது செல்வமுத்துக்குமார சுவாமிக்குஸ்
சாத்தப்படும் சந்தனம் நேத்திரப்பிடி சந்தனம் எனப்படும்.
பங்குனி மாதம் பிரம்மோற்சவம் விசேஷமாகும்.
பிணி தீர்க்கும் பெருமான் குடி கொண்டிருக்கும் இந்த வைத்தீஸ்வரன் கோவிலுக்குச்
சென்று நீராடி, வணங்கி வந்தால் நோய் அற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமுகொழிக்கும்.
|
 |