|

சிறந்த சிவத்தலங்களில் அதிலும் பஞ்ச பூதத் திருத்தலங்களில் அக்னித்தலமாக ஒளி தரும்
தலமாகக் கருதப்படுகிறது இந்த திருவண்ணாமலை.
திருவண்ணாமலைக்குச் செல்ல சென்னையிலிருந்து பேருந்து வசதிகளும் அதிகம் உண்டு.
விழுப்புரம்-காட்பாடி ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ள இந்த நகரத்தின் உயரம் கடல்
மட்டத்திலிருந்து 266 அடிகள் ஆகும்.
திருவண்ணாமலை அற்புதமான சூழ் நிலையையும் அழகான பின்னணியையும் அருமையான கருத்துக்களை
வெளிப்படுத்தும் தல வரலாறுகளையும் கொண்டதாகத் திகழ்கிறது.
படைக்கும் தொழிலைச் செய்து வரும் பிரம்மாவிற்கும் காக்கும் தொழிலைச் செய்து வரும்
மகாவிஷ்ணுவுக்கும் தம்மில் யார் பெரியவர் என்று வரக்கூடாத ஐயம் வந்து முதலில்
வாதமாகத் தொடங்கிப் பின்னர் அது பெரிய வாக்குவாதமாக வளர்ந்து இது குறித்து
சிவபெருமானிடமே கேட்டுவிட எண்ணி அவரிடம் வந்து கேட்டனர்.
கலைமகளின் கணவன் ஆதலால் தானே பெரியவன் என்று பிரம்மா எண்ணியதும் திருமகளின் கணவன்
ஆதலால் தானே பொரியவன் என்று விஷ்ணு நினைத்ததும் அதாவது கல்வியே சிறந்தது என்று
அவரும் செல்வமே சிறந்தது என்று இவரும் எண்ணி இறுமாந்திருந்த்தால் அப்படி ஓர் எண்ணம்
வந்து அது பற்றித் தங்களில் யார் பெரியவர் என்று அறிய சிவபெருமானை அணுகினர்.
பொறுப்புள்ளாவர்கள் பொறுப்பான தொழிலைச் செய்து வருபவர்கள் இப்படிப் பொறுப்பற்று
வாதம் புரிந்து தேவை இல்லாமல் வந்தவர்களுக்குத் தேவையான பாடம் புகட்ட எண்ணம் கொண்டு
தன்னுடைய அடிபக்கத்தின் எல்லையையும் நுனிப்பக்கத்து எல்லையையும் இருவரில் யார் கண்டு
பிடிக்கிறாரோ அவரே பெரியவர் என்று சொல்லி வானத்திற்கும் பூமிக்குமாக ஒரே
தீப்பிழம்பாக மலையென உயர்ந்து நின்றார் சிவபெருமான் கீழே அவரது எல்லை எது என்பதை
அறிய மகாவிஷ்ணு பன்றி ரூபமாகத் தோன்றி பூமியைத் தோண்டிகொண்டே செல்கிறார்.ஆனால்
தோண்டத் தோண்ட மண்தான் வந்து கொண்டிருந்ததே தவிர மகேசனின் பாதத்தைக் காண முடியவில்லை.
அதுபோல மேலே அன்னப் பறவையாகப் பறந்து சென்ற பிரம்மா உயர உயர எவ்வளவு பறந்தும்
சிரத்தைக் காண முடியாது தவித்த பிரம்மனின் கண்ணில் தாழம்பூ ஒன்று மேலிருந்து கீழ்
நோக்கி வருவது கண்ணில்பட்டது. அதனிடம் வினவிய பிரம்மாவிடம் தான் பல கோடி காலத்திற்கு
முன்பேயே சிவனின் முடியில் இருந்து நழுவிக் கீழ் நோக்கி வருவதாகத் தொரிவித்தது.
தனக்குச் சாதகமாகப் பதில் சொல்லும்படி கேட்டுக் கொண்டு பரமசிவன் முன்வந்து தான்
அவரின் முடிப்பகுதியைக் கண்டுவிட்டதாகவும் அதிலிருந்து எடுத்து வந்ததுதான் அந்தத்
தாழம்பூ என்றும் பொய்யுரைத்தார் பிரம்மா! ஆனால் மகாவிஷ்ணுவோ தன்னால் சிவனின்
அடிப்பாகத்தைக் காணமுடியவில்லை என்று மெய் உரைத்தார்.
பொய் உரைத்த பிரம்மனுக்கு பூவுலகில் உனக்கு இனி ஆலயம் ஏதும் தனியே கிடையாது என்று
சபித்தும் பொய்ம்மைக்குத் துணைபோன தாழம்பூ தன் மேனியை இனித் தீண்டக்கூடாது என்றும்
கட்டளையிட்டார்.
மெய் உரைத்த மகாவிஷ்ணுவிற்கு தனது ஆதியையும் அந்தத்தையும் காண்பித்து அருளினார்.
தம்மில் பெரியவர் சிவபெருமானே என்பதை அறிந்து கொண்டனர் அவர்கள் இருவரும். பின்னர்
அவர்கள் கேட்டுக் கொண்டபடி பூஜிக்க ஏற்றவகையில் சிவலிங்கத்தை அந்த நெடிதுயர்ந்த
மலையினின்றும் அளித்து அருளினார். அதனைக் கண்டு பேரானந்தம் கொண்டவர்கள் உடனே
தேவதச்சனைக் கொண்டு அழகிய நகரம் தீர்த்தம் விருட்சம் ஆலயம் முதலியவற்றை உருவாக்கினர்.
|