THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 



திருக்குற்றாலம்- குற்றாலநாதர் கோவில்

 

தல வரலாறு

குற்றாலம் என்றதுமே மனமெல்லாம் குளிர்ந்து குளித்து முடித்ததும் புது உணர்வையும் நிறைவையும் தரவல்லது. தென் காசியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. முதலில் குற்றாலத்தைப் பற்றிக் கொஞ்சம் தரிந்து கொள்வோம். குற்றாலம் ஐந்தாயிரம் அடி உயரமுள்ள மலையாகும். இம்மலை 3 சிகரங்களை உடையது. எனவே திரிகூடமலை என்று சிறப்புப் பெற்றது. பஞ்சந்தாங்கி என்ற சிகரம் 5000 அடிக்கும் மேல் சிறிது உயர்ந்துள்ளது. மலையில் உள்ள காடுகள் செண்பகக்காடு என்றழைக்கப்படும். காட்டில் நிறந்த மூலிகைகளும், அரியவகை மரம் செடி கொடிகளும் நிறைந்து காணப்படுகிறது.
தேனருவி, செண்பகாதேவி அருவி, வட அருவி, ஐந்தருவி இப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட அருவிகள். இந்த அருவிக்கு அருகில் உள்ளது குற்றால நாதர் ஆலயம். மிகப் பழமை வாய்ந்த புகழ்பெற்ற ஆலயம் ஆகும். பண்டைத் தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்டது. திரிகூடராசப்பக் கவிராய இயற்றிய திருக்குற்றாலத் தலபுராணம் அரிய செய்திகளை அற்புதமாகச் சொல்கிறது. குற்றால நாதர் திருக்கோயிலின் கொடி மரத்தைச் சுற்றிலும் உள்ள மண்டபம், திரிகூட மண்டபம், சபாபதி மண்டபம், தெப்பக்குளம், ஐந்து தேர்கள் ஆகியவற்றை கி.பி.1600-1721ல் வடகரை ஆதிக்கம் பொரியசாமி செம்புலி சின்னணைஞ்சாதேவர், அவரது இளவர் ராஜகோபாலத்தேவர் ஆகியோர் நிர்மாணித்துத் திருப்பணி செய்தனர் என்று வரலாறு கூறுகிறது. பாடல் பெற்ற தலமாக இதனைத் திரு ஞானசம்பந்தரும் மாணிக்கவாசகரும் போற்றிப் பாடியுள்ளனர். குற்றாலநாதர், பராசக்தி, குழல்வாய்மொழி அம்மை, நடராஜர், கூத்தபிரான் சந்நிதிகளுடன் சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபையும் இங்கே உள்ளது. சித்திரசபை அற்புத வேலைப்பாடு கொண்டது. சித்திர சபையின் மேற்கூரை மரத்தால் ஆனது. செப்புத்தகடு வேயப்பட்டது. தூணும் சுவரும் தவிர மற்றப் பகுதிகள் அனைத்தும் மரத்தாலேயே செய்யப்பட்டுள்ளன. திருமலை நாயக்க மன்னர் கால சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

வடதிசையிலிருந்து தென் திசை வந்த அகத்திய முனிவர் சிவனடியார் தோற்றத்தில் இருந்ததால் விஷ்ணு குடியிருந்த இக்கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. மனம் வருந்திய அகத்தியர் அருகில் உள்ள இலஞ்சிக்குச் சென்று அங்குள்ள முருகனை வணங்க, நடந்ததை அறிந்த முருகன், குற்றாலம் கோவிலுக்குச் செல்வதற்கான தந்திரம் ஒன்றைச் சொல்லித் தருகிறான். அதன்படி, பழுத்த வைஷ்ணவராக வேடம் தரித்து அகத்தியர் மீண்டும் இந்தக் கோயிலுக்கு வருகிறார். உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார். தாமே பூஜை செய்ய வேண்டுமென்று சொல்லி உள்ளே சென்று கதவைச் சார்த்திக் கொள்கிறார். அங்கே நிற்கும் கோலத்தில் இருந்த பெருமாளின் தலையில் தனது கையை வைத்து நன்றாக அமுக்கி கயிலை நாதனை மனதில் எண்ணித் துதித்தபடி குறுகுக, குறுகுக என்று வேண்ட குறுகிய நாதராக குற்றாலநாதராக ஆகிவிடுகிறார் இறைவன் சைவமே வைணவம் வைணவமே சைவம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வண்ணம் எழுந்தருளியிருப்பவர் குற்றால நாதர் என்று அறிய முடிகிறது.