 |

சுசீந்திரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. திருநெல்வேலி
இரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் சென்று அங்கிருந்து 3 மைல் கன்னியாகுமரி செல்லும் பாதையில் சென்றால் சுசீந்திரம் சென்று அடையலாம். சுசீந்திரம் பழையாறு
ஆற்றின் கரையில் உள்ளது. இந்தத் தலத்திலுள்ள ஆலயத்தின் கோபுரம் 134 அடி உயரம்
கொண்டுள்ளது. அடுத்து மண்டபம்,இதன் நீளம் 132 அடி, அகலம் 32 அடி, உயரம் 21 அடியும்
கொண்ட மிகப் பெரிய விசாலமான மண்டபம்,
பெரிது பெரிதாக தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கிக்
கொண்டு உள்ளன. தூண்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி
ஆகிய 3 தெய்வங்களும் ஒன்றாக ஒரே சிலையாக மண்டபத்தில் காணலாம். இத்தலத்தில் தாணு,
மால், அயன் ஆகிய மூவரும் இணைந்து தாணுமாலயனாக இறைவன் காட்சி தருகிறான். வாசலைக்
கடந்ததும் உள்ள மண்டபம் ஊஞ்சல் மண்டபம். இதில் ரதி, மன்மதன், அர்ஜுனன், கர்ணன்
சிற்பங்களைக் காணலாம். அடுத்து வெளிப் பிரகாரம், இதில் தட்சிணாமூர்த்தி
சந்நிதி உள்ளது. அடுத்துத் தெற்குப் பிரகாரம் இதில் உள்ள வசந்த மண்டபம்,இங்கே நீலகண்ட விநாயகர், கங்காளநாதர், கைலாசநாதர், ஐயனார், ராமரும் சீதாபிராட்டியும் உள்ள
இராமஸ்வரம் சந்நிதி ஆகியவற்றைத்
தரிசிக்கலாம். வடக்குப் பக்கத்தில் சுப்பிரமணியர்,
காலபைரவர், சங்கீதத்தூண்கள், சித்திரசபை, ஆஞ்ச நேயர் 18 அடி உயரத்தில் காட்சி
தருவதையும் காணலாம். ஊஞ்சல் மண்டபத்தை அடுத்து நந்தி சுமார் 15 அடி உயரம் கொண்டதாக
அமைந்து உள்ளது.
நந்திக்கு அருகில் கொன்றை அடி நாதர் என்று குறிப்பிடப்படும்
லிங்கத்தைக் காணலாம். பக்கத்தில் கருடாழ்வார், துவஜஸ்தம்பம். அடுத்து தாணுமாலயன்
சந்நிதி. இந்த தாணுமாலயனை ஒவ்வொரு இரவிலும் இந்திரன் பூஜை செய்வதாகவும்,இவருக்கு
அர்த்த ஜாமப்பூஜை இல்லை என்றும் பூஜைக்கு வேண்டியவற்றைச்
சேகரித்து வைத்து விட்டு
குருக்கள் நின்று விடுவர் என்றும், மாலையில் பூஜை செய்தவர் அடுத்த நாள் காலையில்
நடையைத் திறக்கக் கூடாது என்றும், அப்படி அடுத்த நாள் காலையில் நடையைத் திறக்கும்
குருக்கள் அகம் கண்டதைப் புறம் கூறேன் என்று பிரமாணம் செய்தபடிதான் நடை திறக்க
வேண்டும் என்பதும் இங்கு ஆதிகாலம் தொட்டுக் கடைப்பிடிக்கப்படும் நியதிகள் என்று
அறியலாம்.
இந்திரன் கட்டளைப்படி மயன் தாண்மாலயனுக்கு இந்த ஆலயத்தைக் கட்டினான் என்றும்
கூறுகின்றனர்.
கருவறையில் தாணுமாலயன் லிங்க உருவில் காட்சி தருகிறார். இவருக்கு
அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் முழுவதும் பூமிக்குளிறங்கி குமரி தீர்த்தத்தில்
கலந்து விடுகிறது என்றும் குமரியில் தீர்த்த முழுவதும் எப்பொழுது பார்த்தாலும்
எண்ணெய்ப் பசை உள்ளதாக இருக்கும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். கருவறையைச்
சுற்றி துர்க்கை சங்கர நாராயணர் ஆகியோரைத் தரிசிக்கலாம். அடுத்து வீரபாண்டியன்
மண்டபம் மகாவிஷ்ணுவை நிற்கும் கோலத்தில் தரிசிக்கலாம். இவருக்கும் பின்புறம்
பள்ளிகொண்ட பெருமாளைச் சுவரில் காணலாம். அமர புஜங்க பெருமாள் என்று இவர்
அழைக்கப்படுகிறார். மண்டபத்திற்கு வடக்குப் பக்கம் அறம் வளர்த்த அம்மையின் கோயில்.
பள்ளியறை நாச்சியார் என்ற வேளாளர் பெண் தன் மகளுடன் வந்தாராம். அந்தப் பெண்ணைத்
தாணுமாலயன் தன்னுள்ளே ஆட்படுத்திக் கொண்டதாகவும் அறிய முடிகிறது.
இந்தத் தலத்தில் ஈஸ்வரன் உண்டு. ஆனால் ஈஸ்வரி என்று
குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. எனினும் ஆண்டுதோறும் மாசி மகம் அன்று இந்த அறம்
வளர்த்தாளுக்கும் தாணுமாலயனுக்கும் திருக்கல்யாண உற்சவம் ஊஞ்சல் மண்டபத்தில்
விமரிசையாக நடைபெறுகிறது. இந்தத் தலத்தில் படைத்தல் காத்தல் அழித்தல் இவற்றைச்
செய்துவரும் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாக அதாவது இப்படிக் குறிப்பிடலாம்.
தாணு, மால், அயன் ஆக மூவரும் இணைந்து காட்சி தரும் அற்புதத்தைக் காணலாம்.இந்தத்
தலத்தின் விருட்சம் கொன்ற மரம். இங்குள்ள நந்தி சுதையில் அமையப் பெற்றுள்ளது.
மண்டபங்கள் சிற்பங்கள் சிலைகள் இவற்றை விஜய நகர நாயக்க மன்னர்களும், சேர மன்னர்களும்
சரிசமமாச் செய்துள்ளனர் என்றும், இங்கே மக்கள் தங்கள் புனிதத் தன்மை பற்றி
உணர்த்துவதற்காகக் கொதிக்கும் நெய்யில் கையை நனைக்கும் பழக்கம் கொண்டிருந்தனர்
என்றும் சுவாதித் திரு நாள் மகாராஜா அந்த வழக்கத்தை நிறுத்தினார் என்றும் வரலாறு
கூறுகிறது.
|
 |