THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 



சங்கரன்கோயில்- சங்கரநாரணர் கோவில்

 


 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது சங்கரங்கோயில். விருதுநகர் - தென்காசி இரயில் மார்க்கத்தில் உள்ளது. திரு நெல்வேலியிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. சங்கரன் கோயில் சங்கரலிங்கம், சங்கர நாரயணர், கோமதி அம்மன் ஆலயம் புகழ் பெற்றது. 125 அடி உயரம் உள்ள கோபுரம் இக்கோயிலின் அழகிற்கு அழகு செய்யும் வகையில் அமைந்துள்ளது. கோபுரத்தின் முன்பு பெரியதொரு மண்டபம் உள்ளது. இந்த ஆலயத்தின் தெற்குப்புறம் சங்கரலிங்கம், வடக்குப்புறம் கோமதி அம்மன், இருவருக்கும் இடையே சங்கர நாரணர் ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளைக் காணலாம். முதலில் நமக்குத் தரிசனம் தருவது சங்கரலிங்கர் தான்.

சங்கரலிங்கருக்கு வன்மீக நாதர் என்றும் திருப்பெயர் உண்டு. இவர் புற்றிலிருந்து தோன்றியவர் ஆவார். ஆரம்பத்தில் அந்த இடம் முழுவதும் புன்னைவனமாக இருந்தது. இவ்வனத்தைக் காவல் காத்து வந்த காவல்காரன் அங்கிருந்த புற்று ஒன்றை அகற்ற முற்பட்டான். அப்போது அதில் லிங்கம் ஒன்றும் பாம்பு ஒன்றும் இருக்கக் கண்டு, உடனே திரு நெல்வேலிக்கருகில் மணலூரில் அமர்ந்து ஆட்சி செய்து வந்த உக்கிரபாண்டியன் என்ற மன்னனுக்குத் தகவல் அளிக்க, தகவல் அறிந்ததும், காட்டை அழித்துத் திருத்தி, வனமாக்கி ஆலயம் ஒன்றைக் கட்டினான். அவனது பட்டத்து யானையும் தனது தந்தங்களினால் தரையில் குத்த அந்த மண்ணை எடுத்துப் பெரும் திருவிழாவாகக் கொண்டாடினான். பெருங்காட்டூர் என்னும் இடம் யானை தனது தந்தத்தால் குத்தி பூமியைத் தோண்டிய இடமாகும். காவல் காத்தவனுக்கும் ஊரில் தென் கோடியில் சிறியதொரு கோயில் எழுப்பபப்ட்டுள்ளது. காப்பறையின் தெரு என்பது அக்கோயில் உள்ள தெருவாகும். உக்கிர பாண்டியன் சிலையும் கோயில் உள்ளே இருக்கிறது. கோயிலின் வடமேற்குத் திசையில் புற்றும் உள்ளது. புற்றைப் பாதுகாத்தும் வணங்கியும் வருகின்றனர். இந்தப் புற்று மண் அற்புத ஆற்றல் பெற்றதாக நோய் தீர்க்கும் மருந்தாகக் கருதப்பட்டுக் கோயில் பிரசாதமாக சிறுசிறு உருண்டைகளாக்கித் தரப்படுகிறது.

அப்பனைவிட அம்மை கோமதி மகா வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள். தீராத நோய்களை எல்லாம் அன்னை கோமதி திருவாவடுதுறை பத்தாவது குருவாகத் திகழ்ந்த வேலப்ப தேசிகருக்கு அருள்பாலித்து அவர் மூலம் தீர்த்திருக்கிறாள். கோமதி அன்னையின் சன்னிதியை மகாமந்திர சக்தி வாய்ந்த சக்கரம் ஒன்றைத் தேசிகர் நிறுவியுள்ளதால், பேய் பில்லி சூனியம், நெடு நாள் நொய் நொடிகள் அனைத்தும் கதிரவனைக் கண்ட பனித்துளி போல் அன்னை முன்வந்து வணங்கித் துதித்ததும் பறந்து விடுகின்றன என அனுபவிக்கப்பட்டோர் கூறுவர்.

இங்குள்ள தீர்த்தம் நாகசுனை தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சங்கரலிங்கர் - கோமதி ஆரம்பத்தில் தோன்றிய சந்நிதி. ஆனால் இடையில் தோன்றியது சங்கர நாரணர் சன்னிதி ஆகும். இதைப் பற்றிய வரலாறு ஒன்றும் உண்டு.

இந்தக் கோயில் ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுக்கு முன்னால் கட்டப்பட்டுள்ளது. உக்கிரபாண்டியர் என்ற மன்னன் கோயிலைக் கட்டினான். சீவலமாற பாண்டியன் தலபுராணம் பாடியுள்ளார். அவர் வெட்டிய குளத்திற்கு சீவலப்பரி என்பதாகும். அவரது பெயரில் சீவலராயன் ஏந்தல் என்ற ஊரும் உள்ளது. திருநெல்வேலி அழகிய சொக்க நாத பிள்ளை அன்னையைத் துதித்துப் பாடி உள்ளார். அன்னை கோமதியைத் துதித்தால் அனைத்து நலங்களும் இக-பர சுகங்களும் கிடைக்கும்.