 |

திருமுருகன் படைவீடுகளில் பழமுதிர்சோலை ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது. இந்தத் தலம்
மதுரை மாவட்டத்தில் உள்ளது. மதுரைக்கு வடக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. இது
மலைத்தலம் ஆகும். இந்தத் தலத்திற்கு நீண்ட நெடிய புகழ்மிக்க வரலாறு உண்டு.
அதிகம் கற்றவர் ஆனாலும், அறிவிற் சிறந்தவர் ஆனாலும் அகந்தை சிறிதும் கூடாது.
யாராயினும் அவர் எவ்வளவு கற்றவர் ஆயினும் கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்ற
மனப்பக்குவம் கொள்ள வேண்டும். "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று திருக்குறள் உணர்த்தியதை உணரச் செய்த தலம் இது !
நீண்ட நெடும் வழிப்பயணத்தால் களைப்புற்று நாவல் மரத்தின் அடியில் தமிழ் மூதாட்டி
ஒளவைப்பிராட்டி அமர்ந்து இருந்தார். அப்போது அந்த நாவல் மரத்தின் மேலே பார்த்தார்.
சிறுவன் ஒருவன் அதன் உச்சியில் இருப்பதைப் பார்த்ததும், தனக்குச் சில நாவற்பழங்களை
உதிர்க்கும்படிக் கேட்டார்.
"சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று பதிலுக்குச் சிறுவன் கேட்க
அர்த்தம் புரியவில்லை ஒளவைக்கு, அதன் பொருள் புரியாது நின்ற ஒளவையைப் பார்த்துக்
கலகலவென்று சிரித்தபடி பழங்களை உதிர்க்க ஒளவையும் கீழே விழுந்த பழங்களை ஒவ்வொன்றாக
எடுத்து அவற்றில் ஒட்டி இருந்த மண்ணைத் தனது வாயினால் ஊதி ஊதித் தின்னத்
தொடங்கியதும், பாட்டி பழம் சுடுகிறதா? சொல்லியிருந்தால் சுடாத பழத்தைப்
போட்டிருப்பேனே என்று சிறுவன் சொன்னதும் தான், அதுவரை புரியாது இருந்த பொருள்
புரிந்தது ஒளவைக்கு !
ஆன்றோர் முதல் அரசன் வரை பாராட்டும் தனக்கே புரியாத பொருளைப் புரிந்தவனாக இருந்த
தனக்கும் பாடம் போதித்த சிறுவனைப் பார்த்து மகிழ்ந்த வேளையில் அந்தச் சிறுவனே
முருகனாக ஒளவைக்குக் காட்சி தந்து நெகிழ மகிழச் செய்து அருள் புரிந்தான். பழத்தை
உதிர்த்த சோலை பழமுதிர்சோலை என்றும், அழகர் கோயில், சோலைமலை, திருமாலிருங்குன்றம்
என்றும் பெயர்கள் பெற்றன. கல்வி பல கற்றாலும் ஒளவைக்கு ஞானம் என்ற பழத்தை முருகன்
உதிர்த்து போதித்தான் என்பதை அறிய முடிகிறது.
இந்தத் திருத்தலம் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
இங்கே முருகனும் திருமாலும் தனித்தனியாக எழுந்தருளியுள்ளனர். அடிவாரத்தில் திருமால்,
மலை மீது முருகன். இந்தத் தலத்தில் நூபுரகங்கை என்னும் அரிய புண்ணிய தீர்த்தமான
சிலம்பாறு உள்ளது. இது கோயிலுக்கு அருகில் மண்டபத்தில் கோமுகியும் வழியில் வருகிறது.
நாராயண தீர்த்தம், அனுமதீர்த்தம், கருடதீர்த்தம் என்று மற்ற தீர்த்தங்களும் உள்ளன.
இவற்றில் நூபுரகங்கை தீர்த்தம் உலோகச் சத்து நிறைந்தது என்றும் அதில் நீராடுபவர்
இரும்பைப் போல உறுதியான உடல் வலிமையையும் நோய் எதிர்க்கும் ஆற்றலும் பெறுவர் என்றும்
சான்றோர் கூறுகின்றனர்.
இந்தத்தலத்தில் காவல் தெய்வம் கருப்பண்ணசாமி, மூடப்பட்ட கதவுகளும் பதினெட்டுப்
படிகளும் இங்கே உண்டு. கதவுகளுக்கு முதலில் பூஜை நடைபெறுகிறது.
நாயக்க மன்னர்கள் கட்டிய திருமண மண்டபம் உண்டு.
சுதர்சனர், கல்யாணவள்ளித் தாயார், யோக நரசிம்மர், ஆண்டாள், வலம்புரி
விநாயகர், பைரவர், விச்வசேனார், சுந்தரராஜபெருமாள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
பழம்பெரும் தலமான மூர்த்தி தீர்த்த மகிமை கொண்ட பழமுதிர்சோலை தரிசிக்க வேண்டிய
அருமைத் தலம் ஆகும்.
|
 |