THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 



பாபநாசம்- பாபவிநாசர் கோவில்

 


திருநெல்வேலி தென் காசி மார்க்கத்தில் அம்பாசமுத்திரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே நான்கு மைல் தூரத்தில் விக்ரம சிங்கபுரத்தைக் கடந்தால், சுமார் 1.5 கி.மீ தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பாபநாசம் - பாபவிநாசர் குடி கொண்டுள்ளார். குற்றாலத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் பாப நாசம் உள்ளது. பொதிகை மலை அருகில் உள்ளது. மலை அருவியில் குளித்து, அருகில் உள்ள அகத்திய முனிவர் ஆலயத்தையும் தரிசித்துப் பாபவி நாசரைத் தரிசித்தால் இம்மையில் செய்த பாவங்கள் அவை அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்டிருந்தாலும் அத்தனையும் போம் என்பது பக்தர்களின் அனைவரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். தமிழால் பெருமை அடைந்த பொதிகை மலையும் அகத்தியர் உறைந்த அம்மலை அருகில் உள்ளதால் பாப நாசம் பெருமை பெற்றது. அங்கே அகத்திய முனிவருக்கு மட்டுமல்ல. அவர் வழிபட்ட முருகனுக்கும் மட்டுமல்ல, அவர் வழிபட்ட முருகனுக்கும் சிறு கோயில் உண்டு. அங்குள்ள அருவிக்கு அகத்தியர் அருவி என்றும் பெயர். மேலே அரை கிலோ மீட்டர் உயரத்தில் மலை ஏறிச் சென்றால் மிக உயரமான இடத்திலிருந்து தீர்த்தம் உண்டு. அதற்குக் கல்யாணி தீர்த்தம் என்பது பெயர். எட்ட இருந்து பார்த்து மட்டுமே இந்தக் கல்யாணி தீர்த்தத்தை இரசிக்க முடியும். அருகே நெருங்க முடியாது.

இறைவன் இறைவியை இமயமலையின் மணம்புரிந்து கொள்ளும் திருக்கல்யாண காட்சியைக் காண அண்ட சராசரமும் கயிலையில் கூடி விடுகிறது. முப்பது முக்கோடி தேவர்கள் முனிவர்கள் பெருமக்கள் அனைவரும் வடகோடியான கயிலையில் ஒருசேரக் கூடிவிட்டதால், வடக்குப் பக்கம் பாரம் தாங்காமல் சரிந்து தெற்குப் பக்கம் உயரத் தொடங்கியதும், உடனே இறைவன் அகத்திய முனியை அழைத்து தெற்கே செல்லும்படி அப்படிச் செல்லுவதன் மூலம் தாழ்ந்த வடதிசை சமன் ஆகும் என்றும் சொல்ல அகத்தியரோ இறைவனின் திருமண திருக்காட்சியை தான் மட்டும் காணாமல் செல்ல வேண்டியிருப்பது குறித்து தயங்க, முனிவரின் தயக்கத்தை அறிந்த ஈசன் பொதிகை மலையில் கல்யாணக் கோலத்தில் வந்து காட்சி தருவேன் என்று உறுதியளித்து, அதன்படியே அவருக்குத் திருக்காட்சியை இறைவன் அளித்தாராம். அத்தகைய சிறப்பு பெற்றது இந்தப் பொதிகைமலை பாபநாசம்.