|

கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் பேட்டை ஈஸ்வரன் கோவில் ஆகிய இரண்டு சிவன்
கோவிலுக்கு நடுவில் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. நகரின் மையமாகவும்
இக்கோவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் இரயில்வே ஜங்க்ஷனிலிருந்து மேற்கில் நடை
தூரத்தில் நெடுஞ் சாலையில் கோவை நகராட்சிக்கு அருகில் இந்தத் திருக்கோவில் உள்ளது.
சாலையில் நடந்து செல்பவர்களும் பஸ்ஸில் செல்பவர்களும் சற்று தென்புறம் தங்கள்
பார்வையைப் பதித்தாலே போதும். நேரே கருவறையில் கோனி அம்மன் அழகுறக் கொலுவிருப்பதைக்
கண்குளிரத் தரிசனம் செய்யலாம். அந்த வகையில் அம்மன் இங்கே கருவறையில் கம்பீரமாக
எழுந்தருளியுள்ளதைக் காணவும் கண்டு தரிசிக்கவும் வேண்டிய எழிற்கோலம் ஆகும்.
மகிஷாசுரமர்த்தினி மைசூர் சாமுண்டீஸ்வா¢ ஆகிய தெய்வங்களின் தோற்றத்தை அப்படியே
வார்த்து எடுத்தது போலவும், துர்க்கையின் அம்சங்களும் கொண்டதாகவும் திகழும் கோனி
அம்மன் மகா வரப்பிரசாதி.
இந்நகரின் அரசியாகவும் காவல் தெய்வமாகவும் கோனியம்மன் விளங்கி வருவதாகக் கூறுவர்.
பேரூர் புகழ் பெற்ற தலம். அதன் கிழக்கே தோன்றிய புத்துரை கோவன் என்ற இருளர் தலைவன்
காடுகளாக இருந்தவற்றைத் திருத்தி நாடாகச் செய்தபோது, தங்கள் குடிசைக்கு அருகில்
வடக்குப் புறத்தில் சிறுகோயில் ஒன்றை எழுப்பிக் கல் ஒன்றை நட்டுத் தானும் தன்னைச்
சார்ந்தோரும் வழிபட்டுத் தங்கள் குலதெய்வம் எனப் போற்றி விழாவும் எடுத்தான். பல
ஆண்டுகளுக்கு முன்னர் இளங்கோசர் இந்தக் கொங்கு நாட்டினை ஆண்டபோது சேரர்கள் படை
எடுப்பை எதிர்பார்த்து அவர்களது படை எடுப்பைத் தடுத்து முறியடிக்க மண் கோட்டையையும்
மண்மேடு ஒன்றையும் பழைய கோவன்புத்தூரில் நிறுவினர். இவற்றிற்குக் காவல் தெய்வமாகத்
தனது பெயர் விளங்கும் வகையில் கோனி அம்மன் என்று திரு நாமமிட்டு எழுந்தருளிச்
செய்தனர்.
|