|

காளையார் கோவில் சிவகங்கையிலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ளது. அந் நாளில்
கானப்பேரெயில் என்றும் கானப்பேர் என்றும் திருக்கானப்பேர் என்றும் வழங்கப்பட்டது.
சங்க காலத்தில் பாண்டிய மன்னன் திருக்குறள் அரங்கேறியபோது
அரியாசனத்தில் இருந்த
உக்கிரப் பெருவழுதி என்று சிறப்புப் பட்டம் பெற்றான். பிற்காலத்தில் காளையார் கோவில்
என்று அழைக்கப்படும் இங்கு, ஆலயத்தில் காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று
மூன்று பெயர்களில் இறைவன் அருள் பாலிக்கிறார். இறைவன் மூன்று பெயர்களில் மூன்று
சிறப்புகளுடன் காட்சி தரும் முக்கியத்துவம் பெற்றது இந்தத்தலம்.
சூரிய பகவான் இறைவனை நவரத்தினங்களில் ஒன்றான இரத்தினம் கொண்டு பூஜை செய்து வணங்கிய
தலம் இது.
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவன் காளை உருவில் தன்னைக்
காட்டிய தலமும் இதுவே. கெளண்டின்ய மகாரிஷி இறைவனைப் பூஜித்து வணங்கிய சிறப்புண்டு.
இந்தத் தலத்தின் தீர்த்தம் ரிஷப தீர்த்தம் எனப்படும். சுந்தரர் ஞானசம்பந்தர்
ஆகியோரால் பாடப் பெற்றது. காளையார் கோவில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்குப் பின்னர்,
மதுரை நாயக்க மன்னர்கள் இராம நாதபுர சேதுபதிகள், சிவகங்கை அரசர்கள் ஆகியோரின்
ஆளுகைக்கு உட்பட்டது. மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராட்டம்
நடத்தியபோது அவர்களைக் காக்கும் அரணாக இராணுவத்தளமாக இது விளங்கியது. அக்டோபர்
1804இல் காளையார் கோவிலை வெள்ளையர் தம்வசம் கொண்டனர்.
காளீஸ்வரர் சந்நிதி முன் உள்ள கோபுரம் மற்றும் சுந்தரேஸ்வரர் மீனாட்சி ஆலயம் வரகுண
பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது.
|