|
விநாயகர் சதுர்த்தி
இந்துக்கள் வழிபடும் முதன்மையான தெய்வங்களுள் விநாயகர் குறிப்பிடதக்கவர். அவரை
வழிபட்ட பிறகே மற்ற தெய்வங்களைத் தொழுவர். அத்துடன் தங்கள் தொழில் நல்ல முறையில்
நடக்க விநாயகரை வேண்டிகொள்வர்.
விநாயகர் அருளினால் எத்தொழிலிலும் இடையூறின்றி
நிறைவேறும்மென்பது மக்களின் நம்பிக்கை. அதனாலேயே விக்னேஷ்வரர் அதாவது இடையூறுகளை
நீக்குபவர் என்று கூறுவர்.
விநாயகரை கணபதி கணேசர் பிள்ளையார் மூஷிகவாகனன் என்று பல பெயர்களிட்டு அழைப்பர்.
கயிலை நாதனுக்கு விநாயகர் மூத்த மகன் என்று புராணங்கள் கூறுகின்றன.
அவருடைய முகம் யானையின் முகமாக இருக்கும். அதாவது தும்பிக்கையும் தந்தங்களும்
கொண்டிருக்கும். ஓம் என்ற பிரணவ மந்திரத்தைக் குறிப்பதே விநாயகர் உருவம் என்று
கூறுவர். விநாயகரின் வாகனம் மூஷிகம் எனப்படும்
பெரிச்சாளி ஆகும். அத்தகைய சிறப்பு
வாய்ந்த விநாயகரைத் துதிக்கும் நாளே பிள்ளையார் சதுர்த்தி ஆகும்.
இது ஒவ்வொரு தமிழ் ஆண்டிலும் ஆவணி மாதத்தில் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தி திதியில் வரும்.
விநாயகர் சதுர்த்திக்கு பிறகுதான் மற்ற பண்டிகைகள் தொடர்ந்து வரும்.
தீபாவளி
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் முக்கியமானது தீபாவளி. இப்பண்டிகை
இந்தியாவெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் போது
பட்டாசுகளையும், பல்வேறு வாணங்களையும் கொளுத்தி மகிழ்வது ஒரு சிறப்பான
நிகழ்ச்சியாகும். இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளையொட்டி வரும். தீபாவளி
என்றால் தீபங்களின் வரிசை என்பது பொருளாகும். ஆனால் தீபங்களை ஏற்றிக் கொண்டாடும்
வழக்கம் தென்னகதில் அவ்வளவாக பின்பற்றுவதில்லை.
வட இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.
இப்பண்டிகை இருளினைப் போக்கி ஒளியினைக் கொடுக்கும் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.
காலையில் எழுந்து எண்ணெய் ஸ்னானம் செய்வது முக்கியமாகும். தலையில் தேய்த்துக்
கொள்ளும் எண்ணெயில் லட்சுமியும் அன்று நீராடும் வென்னீரில் கங்கையும் இருப்பதாகச்
சொல்வார்கள். ஆகவே கங்கையில் சென்று நீராடும் புண்ணியம் அன்று நீராடுவதால்
கிடைக்கிறது. அன்று வென்னீரில் குளிப்பது மிகவும் சிறப்பானது.
வட நாட்டில் அமாவாசை பிரதமை அன்று இந்த விழாவை கொண்டாடுவர். அவர்கள் மூன்று தினங்கள்
இப்பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். முதல் நாள் சிறு தீபாவளி என்றும், மறு நாள்
பொரிய தீபாவளி மூன்றாவது நாள் கோவர்த்தன பூஜை செய்வதும் மகிழ்வர்.
நவராத்திரி
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறு நாள் பிரதமை முதல் கொண்டாடுவது
நவராத்திரி ஆகும். தேவியின் வழிபாட்டுக்கு உகந்த காலம் இதுவாகும். நவராத்திரி என்ற
சொல்லுக்கு ஒன்பது இரவுகளில் செய்யப்படும் நோன்பு அல்லது விழா என்பது பொருள்.
இப்பண்டிகை பகலில் வழிபாடு செய்வதில்லை. மாலையிலும் இரவிலும் தான் தேவிக்கு பூஜை
செய்து வருகின்றனர். பெண்களையே தேவியின் சொரூபமாகப் பூஜிப்பது இப்பண்டிகையில் ஒரு
பிரத்தியேக அம்சமாகும். இலட்சுமி, சரஸ்வதி, துர்கை ஆகியவர்களுக்கு பூஜை
செய்யப்படுகின்றது. சிவாலயங்களில் அம்பிகைக்கு தனிப் பூஜை நடத்தி கொலு மண்டபத்தில்
கொலு அமர்த்துவர்.
இதை தசரா என்று சொல்வதுண்டு. நவராத்திரி ஒன்பது நாளும் கொண்டாடிய பிறகு மறு நாளே
விழா முடிவடைவதால் பத்து நாள்கள் ஆகும். அதனாலேயே தசரா என்று சொல்வர். இப்பண்டிகை
மற்ற மானிலங்களை விட கர்னாடக மானிலத்தில் மைசூரில் வெகு சிறப்பாகக் கொண்டாடபடுகிறது.
பல ஊர்களிலிருந்தும் மக்கள் மைசூரில் கூடி இவ்விழாவைக் கண்டு களிப்பர். அங்கு
சாமுண்டீஷ்வரிக்கு பிரத்யேக பூஜை வழிபாடு நடைபெறும்.
பொங்கல்
இந்துமதப் பண்டிகைகளில் பொங்கல் என்பது மிகப்
பெரிய பண்டிகையாகும். தமிழ் நாட்டில்
சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இதையே உழவர்கள் தினம் என்றும்
சொல்லுவார்கள். உலகில் விவசாயம் அதிகம் நடைபெறும் இடங்களில் உழவர்கள் அறுவடை நாளைக்
கொண்டாடுவதுண்டு. அதை போன்றதுதான் பொங்கல் பண்டிகை. இந்தியா ஒரு விவசாய
நாடு.குறிப்பாக தமிழர்கள் பலர் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். ஒவ்வொரு தமிழ்
ஆண்டும் மார்கழி மாதத்தில் தானியங்களை அறுவடை செய்வர். பயிர் செழித்து வளர நீரும்,
உழைப்பும் மிகவும் என்றாலும்
சூரிய வெளிச்சமும், வெப்பமும் மிகவும் இன்றியமையாதவை.
அதனாலேயே சூரியனுக்கு நன்றிக் கடனாக பொங்கல் விழாவை பிரதி ஆண்டு தை மாதம் முதல்
நாளில் கொண்டாடுகிறார்கள். பொங்கல் விழா நான்கு நாள்கள் கொண்டாடபடுகிறது. மார்கழி
மாதக் கடைசி நாளை போகிப் பண்டிகையாகவும், அடுத்து பொங்கல், மாட்டுப் பொங்கல்,
கன்னிப் பொங்கல் எனக் கூறுவர்.
புத்தாண்டு தினம்
உலக மக்கள் அனைவரும், ஒவ்வொரு
பிரிவினரும் வருடத்தில் முதல் நாளை, புத்தாண்டு
தினமாகக் கொண்டாடுவது வழக்கம். தமிழ் நாட்டில் தமிழ் ஆண்டின் முதல் நாளைப்
புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகின்றனர். ஆந்திர மக்கள் தெலுங்கு வருடப் பிறப்பை
யுகாதி பண்டிகையாகவும், கேரள மக்கள் அன் நாளை விஷ¥ என்றும் கொண்டாடுகின்றனர்.
பங்குனி மாதத்தின் இறுதியில் வீடுகளை சுத்தம் செய்து பழையதையெல்லாம் கழித்து விடுவர்.
வீட்டுக்கு வண்ணம் பூசுவதும் உண்டு. வீட்டின் தரையை நீரால் சுத்தம் செய்து மாக்கோலம்
இட்டு அழகு செய்வர்.
சூரிய பகவான் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் பிரவேசிப்பார். மேஷ மாதமே சித்திரை
மாதம் எனப்படும். அந்த ராசியில்
சூரியன் உச்சம் பெறுகிறார் என்று ஜோதிடர்கள் கூறுவர்.
அம்மாத முதல் நாளையே தமிழ் மக்கள் புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகின்றனர்.
இம்மாதத்தில் மா, பலா, வாழை மரங்களில் காய்கனிகள் செழித்துப் பெருகியிருக்கும்.
அத்தோடு வேப்ப மரங்களிலும் பூக்கள் பூத்துக் குலிங்கியிருக்கும்.
கார்த்திகை தீபம்
பிரதி ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை கார்த்திகை தீபம். தமிழ்
நாட்டில் தீபாவளித் திரு நாளில் வீட்டின் வெளியேயும் உள்ளேயும் விளக்குகளால் அலங்கரிக்காதவர்கள்
கூட கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்குகளை ஏற்றி வைப்பர். இப்பண்டிகை மூன்று
நாள்கள் கொண்டாடப்படும். முதல் நாள் சிவன் கார்த்திகை என்றும், இரண்டாம் நாள் விஷ்ணு
கார்த்திகை என்றும், மூன்றாம் நாள் குப்பைக் கார்த்திகை என்றும் கூறுவர்.
இது கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாளிலேயே கொண்டாடப்படும். அன்று
சிவாலயங்களில் விசேஷப் பூஜைகள் நடைபெறும். திருவண்ணாமலையில் அன்று மாலை தீபம்
ஏற்றுவது வழக்கம். அங்கு தீபம் ஏற்றியப் பிறகுதான் மற்ற ஊர்களிலுள்ள கோயில்களிலும்
தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றியப் பிறகுதான் விரதமிருப்பவர்கள் தத்தமது வீடுகளில்
பருப்பு பாயசத்துடன் உணவு உட்கொள்வர். அன்று தீபாவளி போன்று பட்டாசுகளைக்
கொளுத்துவதும், வாணங்களை வெடிப்பதும் உண்டு.
ஆவணி அவிட்டம்
ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதத்தில் பெளர்ணமியன்று அவிட்ட நட்சத்திரம் வரும் நாளில்
கொண்டாடப்படுவதே ஆவணி அவிட்டமாகும். இது இந்துக்களில் பூணூல்
தரிப்பவர்கள் மட்டுமே
கொண்டாடுவர். பண்டிகைகள் பெரும்பாலும் பெண்களுக்கென்றே கொண்டாடப்படுபவை. ஆனால் ஆவணி
அவிட்டம் ஆண்களுக்கென்று கொண்டாடப்படுவதாகும். இருந்தாலும் பெண்களின் ஒத்துழைப்பும்
தேவையாகும்.பூணூல் அணிந்தவர்கள் அன்றாடம் சந்தியா வந்தனம் செய்து, காயத்திரி ஜபம்
செய்வர். அத்தகையோர் ஆண்டுக்கொருமுறை பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து
கொள்ளும் நாளே ஆவணி அவிட்டமாகும்.
ஸ்ரீ ராம நவமி
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்று இராம அவதாரம். அந்த இராமர் பிறந்த தினத்தைக்
கொண்டாடும் பண்டிகையே ஸ்ரீராம நவமி.இது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் புனர்பூச
நட்சத்திரமும்,நவமி திதியும் கூடிய நாளில் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் அனைவருமே
கொண்டாடுகின்றனர். இருப்பினும் வைணவர்கள் விசேஷமாகக் கொண்டாடுவர். பத்து தினங்கள்
கொண்டாடி மகிழ்வர். தென்னிந்தியாவில் மட்டுமின்றி, வட இந்தியாவிலும்
கொண்டாடப்படுகிறது. அங்கெல்லாம் நவமிக்கு எட்டுத் தினங்களுக்கு முன்பிருந்தே அகண்ட
ராமாயணமென்று தொடங்கிவிடுவர். துளசிதாசர் இயற்றிய இராமாயணத்தைப் படிக்க வைத்துக்
கேட்பர். சிலர் வால்மீகி இராமாயணத்தையும் வாசிப்பதுண்டு.
கோகுலாஷ்டமி
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் கோகுலாஷ்டமி ஒன்று. இந்தியாவின் பல பாகங்களிலும்
இப்பண்டிகை விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில்
கொண்டாடப்படும், என்றாலும் கண்ணன் அஷ்டமி திதியில் பிறந்ததால் அத்திதி கொண்ட நாளையே
கோகுலாஷ்டமியாகக் கொண்டாடுகின்றனர். இந்துக்களில் சைவர், வைணவர் என்ற இரு
பிரிவினர்
இருந்த போதிலும், கண்ணனைப் பொறுத்தவரை தாங்கள் வழிபடும் தெய்வமாகவே நினைகின்றனர்.
அதனால் இந்துக்கள் ஒவ்வொருவரும் கண்ணன் தங்கள் வீடில் பிறந்ததாக எண்ணிக்
கொண்டாடுகின்றனர். அதில் வைணவர்கள் கண்ணன் பிறந்த ரோகிணி நட்சத்திரம்கூடிய நாளைக்
கொண்டாடுவர். அதனால் அவர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுவர்.
வைகுண்ட ஏகாதசி
ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை சிறப்பாகக்
கொண்டாடுவர். முக்கோடி ஏகாதசி என்பர்.இதையே வைகுண்ட ஏகாதசி என்றும் கூறுவர். இந்த
ஏகாதசியில் விரதமிருப்பவருக்கு பல நன்மைகள் பெருகும் என்று நம்பப்படுகிறது.
வைணவர்களின்றி சைவர்களும் கூட இந்த வைகுண்ட ஏகாதசியில் விரதமிருக்கின்றனர். வைகுண்ட
ஏகாதசி அன்று தான் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஒவ்வொரு வைணவக் கோயில்களிலும்
இத்தகைய விசேஷம் நடைபெறும் என்றாலும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறுவது புகழ் பெற்றதாகும்.
அன்று முழுவதும் விரதமிருக்க வேண்டும். அன்று இரவில் தூங்காமல் கண் விழித்திருக்க
வேண்டும். ஏகாதசிக்கு மறு நாள் துவாசி. அன்று பாரணை என்னும் விரதத்தை முடித்து
காலையிலேயே உணவு உட்கொள்வர்.
மகா சிவராத்திரி
சைவர்களின் பண்டிகைகளுள் மகா சிவராத்திரியும் ஒன்று. இது மாசி மாதத்தில்
கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி மகாவிஷ்ணுவுக்குக் கொண்டாடப்படுவது. சிவனுக்குக்
கொண்டாடப்படுவது சிவராத்திரி. அன்று இரவு முழுவதும் கண் விழித்திருப்பர்.
சிவாலயங்களில் தீபங்கள் ஏற்றி பலவகைப் பழங்களையும் நைவேத்யமாக வைத்து சிவனுக்கு
அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வர்.
அன்று இரவு முழுவதும் விரதமிருந்து கண்விழித்திருந்து பின் மறு நாளே உணவு உட்கொள்ள
வேண்டும். இவ்விரதமிருப்பதால் சகல வளமும், பாக்கியமும் பெருகும் என்று
நம்பப்படுகிறது.
|